சென்னை:திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள அவர்களது சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இசை அமைப்பாளர் தீனா மீண்டும் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எங்கள் மீது 2, 3 குற்றச்சாட்டு வைத்தார்கள். அசோசியேட் உறுப்பினர்களுக்கு ஏன் உரிமை கொடுத்ததாக கேட்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி, நீதிமன்ற அனுமதியுடன்தான் இந்த தேர்தலை நடத்துகிறோம்.
அசோசியேட் உறுப்பினர்களுக்கு உரிமை இருக்கிறது. நான் ஆயுட்கால உறுப்பினர். நான் இறந்து விட்டால், சங்கத்தில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரும். மருத்துவ உதவிக்கும் சங்கத்தில் 50 ஆயிரம் வரை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், 660 அசோசியேட் உறுப்பினர்களுக்கு அந்த உரிமை கிடையாது. மிகவும் கஷ்டத்தில் இருந்தார்கள்.
நான் இரண்டு முறை தலைவராக இருந்தபோது அவர்கள் மனுக்களை கொடுத்ததாகவும், முதல் முறையாக கரோனா காலத்தில் செய்ய முடியவில்லை. இரண்டாவது முறை 660 பேருக்கும் ஓட்டு வாங்கி கொடுத்திருக்கிறோம். ஓட்டுரிமை ஏன் கொடுத்தீர்கள் என்று எங்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் வெற்றி பெற்று, இன்று சந்தோஷமாக எல்லோரும் வாக்களிக்கிறார்கள். இப்போது எல்லோரும் சமநிலையுடன் நடத்தக்கூடிய தேர்தலாக இருக்கிறது” என்றார்.
பவதாரிணி குறித்த கேள்விக்கு, “பவதாரிணி பெயரில் நாங்கள் பணம் எதுவும் கொடுக்கவில்லை. அது தவறானது. கையெழுத்து போட்டு நிவாரண நிதி வாங்கியதாக குற்றச்சாட்டு சொல்கிறார்கள். நாங்கள் அதையெல்லாம் நீதிமன்றத்தில் கொடுத்து அனுமதி வாங்கிய பிறகுதான் தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டது” என்றார்.