சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் சர்வதேச முதியோர் தினவிழா மற்றும் தமிழ்நாடு முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 975 இடங்கள் கொண்ட முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு 3 மாதம் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தேசிய முதியோர் மருத்துவமனையில் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்லாங்குழி, கேரம், பாடல்களை கண்டறிதல், தினசரி வாசிப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது, தமிழ்நாடு அதிகமான முதியோர்களைக் கொண்ட மாநிலமாக உள்ளது, இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதியோர்களுக்கான பிரத்யேக மருத்துவமனை கிண்டியில் உள்ளது. இதுவரை 1 லட்சத்து பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள் இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று உலகம் முழுவதும் முதியோர் பராமரிப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது” என கூறினார்.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் இல்லாதது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பதவி உயர்வுக்கான பட்டியலில் 26 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றதன் காரணமாக, உடனடியாக முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது.