சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகார் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடந்த டிசம்பர் 12ஆம் தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறி, அது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் காவல் நிலையத்தினரால் சமர்ப்பிக்கப்பட்டன.
இதற்கு இளவரசு தரப்பில், கடந்தாண்டு டிசம்பர் 13ஆம் தேதி தான் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகவும், டிசம்பர் 12ஆம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும், காவல் துறையினரின் சிசிடிவி காட்சிகள் போலியானவை என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சிடிஆர் எனும் மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு, காவல் துறைக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்திருந்தார்.