சென்னை: சமீப காலமாக மலையாள சினிமாவின் கதைகள் கேரளா தாண்டியும் பேசப்பட்டு வருகிறது. கண்ணூர் ஸ்குவாட், பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் என மலையாள சினிமா வித்தியாசமான படைப்புகள் மூலம் கவனம் பெற்று வருவதாக சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில், கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியாகி உள்ள ரொமான்டிக் காமெடி படமான 'பிரேமலு' படமும் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்து வருகிறது. இயக்குநர் கிரீஷ் ஏ.டி "தண்ணீர் மாத்தன் தினங்கள்" மற்றும் "சூப்பர் சரண்யா" போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ரூ.51.9 கோடியைத் தாண்டி உள்ளது.
இப்படத்தில் நஸ்லென் கே.கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேமலு திரைப்படம் தற்போது சினிமா ஆர்வலர்களிடையே பேசுபொருளாக உள்ளது. நஸ்லென் கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோருக்கு இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும், அதே சமயம் பல இடங்களில் சிரிப்பையும் வர வைக்கிறது.
தனது லட்சியங்களுக்கும், எதிர்பாராத காதலுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ரீனுவாக மமிதா பைஜூவின் கதாபாத்திரம் கவனத்தைப் பெறுகிறது. இதனுடன், நஸ்லன் கஃபூர் சச்சினாக நிறைய இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார். அவரது கதாபாத்திரம் இயல்பான, அதேசமயம் அழகையும், அப்பாவித்தனத்தையும் கொண்டு உள்ளது. "பிரேமலு" பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மட்டுமில்லாமல், மலையாள சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக மாறி உள்ளது.
இதையும் படிங்க:நானி 32; பவன் கல்யாண் பட இயக்குநரின் அடுத்த படைப்பு - வெளியான முக்கிய அப்டேட்!