ஐதராபாத் : மலையாளத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். நடிகர் மோகன்லால், நடிகை மீனா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். தனது மகளிடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் இளைஞரை தாய் மற்றும் மகள் தள்ளிவிடும் போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கிறார்.
இந்த கொலைப் பழியில் இருந்து தனது மகள் மற்றும் மனைவியை காப்பாற்ற கதாநாயகன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் போலீசாரிடம் குடும்பத்துடன் சிக்கிய போதும் அதில் இருந்து கதாயாநயகன் எப்படி சாதுர்யமாக செயல்பட்டு வெளிவருகிறான் எனபது தான் இந்த படத்தின் கதை.
2013ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் பட்டி தொட்டி எங்கும் ஓடி வசூலை வாரிக் குவித்தது. த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதில் நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி, மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணி, நிவேதிதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். தமிழிலும் இந்த படம் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.
தமிழ் மட்டுமின்றி கன்னடத்தில் த்ரிஷ்யா, தெலுங்கில் த்ரிஷ்யம், இந்தியில் அஜெய் தேவ்கான் நடிப்பில் த்ரிஷ்யம் என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் 2ஆம் பாகமும் வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கொரிய மொழியில் சீரிஸ்சாக வெளியிடப்பட்ட நிலையில் அதுவும் வெற்றி பெற்றது.
இப்படி தொடர் வெற்றிகளை குவித்து வந்த த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹாலிவுட்டை சேர்ந்த Gulfstream Picture என்ற தயாரிப்பு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை ஆங்கிலம் மற்றும் ஸ்பானீஷ் மொழியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக Panorama Studios நிறுவனத்துடன் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்ற சிறப்பை த்ரிஷ்யம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :"விவசாய உரங்களுக்கு ரூ. 24ஆயிரம் கோடி, வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்த ரூ.75 ஆயிரம் கோடி" - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!