சென்னை: தமிழ் சினிமாவில் இந்த 2024ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை பல படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் அதிக வசூலை குவிப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் மாஸ் கமர்ஷியல் நடிகர்கள் இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சில திரைப்படங்கள் இந்த வருடம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த 2024ஆம் வருடத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, அதிக வசூலை பெற்று வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
அரண்மனை 4: தமிழ் சினிமாவில் பேய்ப் படங்கள் இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. பேய்ப் படங்கள் ட்ரெண்ட் காலாவதியான பின்னரும் இவர் தனது அரண்மனை சீரியஸ் படங்களை இயக்கி வருகிறார். அதுவும் நல்ல வசூலை பெற்று வருகிறது. தமிழில் ரீரிலீஸ் படங்களாக வந்து வெற்றி பெற்று வந்த காலகட்டங்களில், இவர் இயக்கிய ’அரண்மனை 4’ திரைப்படம் வரவேற்பைப் பெற்றது.
அரண்மனை 4 திரைப்பட போஸ்டர் (Credits - Film Posters) பேய் திகில் காட்சிகள், காமெடி, கவர்ச்சி பாடல்கள் இருந்தாலும் அரண்மனை 4 திரைப்படம் திரைக்கதை மூலம் ரசிகர்கள் கவர்ந்தது. அரண்மனை 4 திரைப்படம் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சாக்னில்க் வெளியிட்ட தகவலின்படி இந்திய அளவில் 79 கோடியும், உலக அளவில் 20 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மகாராஜா: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அவரது 50வது திரைப்படம் ’மகாராஜா’. நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பலர் மகாராஜா திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர்.
மகாராஜா திரைப்பட போஸ்டர் (Credits - Film Posters) திரையரங்குகளில் மட்டுமின்றி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகி உலக அளவில் பிரபலமடைந்தது. மகாராஜா திரைப்படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலக அளவில் தற்போது வரை 165 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது சீன மொழியில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.
வாழை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’வாழை’. வாழைத்தார் சுமக்கும் தொழிலாளிகள் தங்களது வாழ்வில் தினசரி சந்திக்கும் அவல நிலைகளும், அவர்களது ஏழ்மை நிலையையும், அவர்கள் குறித்த சமூக பார்வையையும் காட்டிய விதத்தில் வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.
வாழை திரைப்பட போஸ்டர் (Credits - Film Posters) மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் சிறு வயதில் நடந்த சம்பவங்களின் பின்னணியாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். 5 கோடி பட்ஜெட்டில் உருவான வாழை திரைப்படம் உலக அளவில் மொத்தமாக 35 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. வாழை திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ்: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்த மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கொடைக்கானலுக்கு நண்பர்கள் குழுவாக சுற்றுலா செல்கின்றனர். அங்கு குணா குகையில் மாட்டிக் கொள்ளும் நண்பர்களை எவ்வாறு காப்பாற்றுகின்றனர் என்பதே மையக்கதை. 20 கோடியில் எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலக அளவில் 241 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட போஸ்டர் (Credits - Film Posters) தமிழ் மொழியில் மட்டும் 62.34 கோடி வசூல் செய்தது. இந்த வருடம் தமிழ்நாட்டில் வெளியான படங்களில் கோட், அமரன் ஆகிய படங்களுக்கு பிறகு அதிக லாபம் ஈட்டிய படமாக அமைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 141.61 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது
லப்பர் பந்து: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட்டை மையமாக கொண்டு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான லப்பர் பந்து திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் அனைவரது கேரக்டரும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம் உலக அளவில் 43.25 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. லப்பர் பந்து ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
லப்பர் பந்து திரைப்பட போஸ்டர் (Credits - Film Posters) மேலும் மணிகண்டன் நடித்த ’Lover’, சூரி நடித்த ’கொட்டுக்காளி’, சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்கள் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க அதிக வசூலை பெற்றுள்ளது.