சென்னை: மிக நீண்ட வருடங்கள் கழித்து வெளியான 'மதகஜராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் கூட்டணியில் வெளியான மதகஜரஜா திரைப்படம் ஐந்து நாட்கள் முடிவில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்தில் விஷாலுடன் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
பல்வேறு பிரச்னைகளால் பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த 'மதகஜராஜா', ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. 12 வருடங்கள் முன்னால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இப்போது வெளிவரும் புதிய படங்களுடன் எப்படி போட்டியிட இருக்கிறது என சந்தேகமும் இருந்து வந்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மக்கள் அனைவரும் கொண்டாடத்தக்க பொழுதுபோக்கு சினிமாவாக உள்ளது என பலராலும் பாராட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளானது. இப்படம் தான் 2025ஆம் ஆண்டு முதல் வெற்றிப் படம் என கருதப்படுகிறது.
இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை படக்குழுவினர் சென்னையில் ஒருங்கிணைத்தனர். அதில் சுந்தர் சி, அஞ்சலி, விஜய் ஆண்டனி, விஷால் என படக்குழுவினர் அனைவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர். மேடையில் பேசிய விஷால், "மதகஜராஜா படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. எல்லோருக்கும் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்தப் பிரச்னையை எல்லாம் மறக்கும்படியான ஒரு படமாக அமைந்திருக்கிறது மதகஜராஜா.