சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்தில் விஷாலுடன் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம், தற்போது பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ’மதகஜராஜா’ உடன் ஷங்கர் இயக்கிய ’கேம் சேஞ்சர்’, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ’வணங்கான்’, ’மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களும் வெளியாகியுள்ளது.
மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளிவருவதால் ’மதகஜராஜா’ படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. மேலும் 12 வருடங்கள் முன்னால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இப்போது வெளிவரும் புதிய படங்களுடன் எப்படி போட்டியிட இருக்கிறது என சந்தேகமும் இருந்து வந்தது. இந்நிலையில் மதகஜராஜாவின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
சாக்னில்க் (Sacnilk) இணையதளம் அறிக்கையின்படி ‘மதகஜராஜா’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் 3.1 கோடி வசூல் செய்துள்ளது. இது ’கேம் சேஞ்சர்’ தமிழ் பதிப்பின் முதல் நாள் வசூலைவிட அதிகமாகும். கேம் சேஞ்சரின் முதல் நாள் வசூல் ஒட்டுமொத்தமாக 51.25 கோடியாக இருந்தாலும் தமிழில் 2.1 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.