தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மகா கவிதை நூலுக்காக பெருந்தமிழ் விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து!

lyricist Vairamuthu: மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும், தமிழ் பேராயமும் இணைந்து கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்காக வைரமுத்துவிற்கு பெருந்தமிழ் விருது வழங்கியுள்ளது.

மகா கவிதை நூலுக்காக பெருந்தமிழ் விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து
மகா கவிதை நூலுக்காக பெருந்தமிழ் விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 3:37 PM IST

சென்னை:தமிழ் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து ஏராளமான கவிதை தொகுப்புகள், புதினங்களை எழுதியுள்ளார். இவரது கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட புதினங்கள் எழுத்து உலகில் பெரும் புகழ்பெற்றவை. இந்நிலையில், வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகா கவிதை’ நூல், தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டுகளை பெற்றது.

தற்போது மலேசியாவில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும், தமிழ் பேராயமும் இணைந்து, கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகா கவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம்) வழங்கின.

தான்ஶ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில், டத்தோ ஶ்ரீ எம் சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருந்தமிழ் விருது மற்றும் பரிசுத்தொகை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகா கவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் ஐந்து பேர், நூல் குறித்து சிறப்புரை வழங்கினர்.

நீர் குறித்து இஸ்லாமிய கல்விக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஃபாலும், காற்று குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் முனைவர் இராஜேந்திரனும், தீ குறித்து சுல்தான் இதுரீசு கல்வியல் பல்கலைக்கழகம் தலைவர், மலேசிய தமிழ்ப் புலவர் சங்கத்தைச் சேர்ந்த முனைவர் மனோன்மண தேவி அண்ணாமலையும், பூமி குறித்து மேனாள் காவல்துறை ஆணைய புலவனின் புவி காக்கும் வேட்கை டத்தோ ஶ்ரீதெய்வீகன் ஆறுமுகமும், ஆகாயம் குறித்து மலேசியத் தமிழ்நெறிக் கழகம் தேசியத் தலைவர் தமிழ்ப்பெருந்தகை இரா.திருமாவளவனும் விரிவாக பேசி, கவிஞர் வைரமுத்துவின் படைப்பை வெகுவாக பாராட்டினர்.

இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை ஆற்றிய வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்காக, சமீபத்தில் மலேசியா வந்தடைந்த வைரமுத்துவிற்கு ‘டத்தோ’ ஶ்ரீ எம் சரவணன் தலைமையில், விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் ஹோட்டல் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:தாயும் மகளும் போட்டாபோட்டி.. போடி குடும்பத்தின் சாதனை படிக்கட்டுகள்!

ABOUT THE AUTHOR

...view details