எழுத்தா? இசையா? உடலா? உயிரா? (Etv Bharat Tamilnadu) மதுரை: வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து பங்கேற்று பேசினார். அப்போது மேடையில் பேசிய வைரமுத்து, "கார்ல் மார்க்சின் பிறந்தநாள், மாநாடு நடைபெறும் இந்த ஊரும் பொருள் உடையது. மதுரையில் கோவில் உண்டு, மலை உண்டு, ஆனால் கடல் இல்லை. அதற்காக விக்கிரம ராஜா வணிகர்களை ஒருங்கிணைத்து ஒரு கடலை உருவாக்கி இருக்கிறார்.
ஒரு முனை வரியைக் கொண்டு வந்தது உங்கள் அமைப்பு. நுழைவு வரியை நிறுத்தியது உங்கள் அமைப்பு. கரோனா காலத்தில் இந்த வணிகர் சமுதாயம் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றியது" என்றார். இதற்கிடையே தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று வணிகர் சங்க மாநாட்டில் வைரமுத்து கோரிக்கை வைத்ததால் அதை ஏற்றுத் தமிழில் பெயர்ப் பலகை வைப்போம் என்று வணிகர் சங்கத்தினர் உறுதி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து, "இளையராஜா விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று சொல்லிவிட்டேன். எம்எஸ்வியா? கண்ணதாசனா? என்ற கேள்விக்கு, உடலா?.. உயிரா?.. என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் எம்எஸ்வியா? கண்ணதாசனா? என்கிற கேள்விக்குப் பதில். எம்.எஸ்.வி உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும், உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது.
இந்த மாநாடு பயனுள்ளதாக அமைந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் பரிசீலனை செய்யும் என்று நான் நம்புகிறேன். வணிகர்கள் தான் ஒரு சமூகத்தின் இரத்த ஓட்டம். வணிகர்கள் தான் பல்வேறு இடங்களில் விளையும் பொருட்களை நமது வீட்டுக்குள் கொண்டு வந்து உதிரத்தில் சேர்க்கிறார்கள். வணிகர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆகவில்லை என்றால் பெட்டில்தான் இருந்திருப்பார்" - அஜித் குறித்து சுந்தர்.சி பகிர்ந்த சுவாரஸ்யம்!