சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவரது படங்கள் வெளியாகும் நாட்களை அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவர். இந்த நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாகக் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருட காலமாகவே அஜித்தின் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. இது அவரது ரசிகர்களுக்குப் பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தியது. துணிவு படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படம் திடீரென கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ (Vidaa Muyarchi) திரைப்படத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு அஜித் மற்றும் த்ரிஷா காம்போ தற்போது மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், ஆரவ், அர்ஜுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.
படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் புதிய இடத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அஜர்பைஜானில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தினமும் வைரலாகி வருகிறது. அதில் அவரது உடை மற்றும் தோற்றம் பார்ப்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது அதிரடி ஆக்சன் படமாக விடாமுயற்சி உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே சூர்யா நடித்து கடந்தாண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பல்வேறு எதிர்பார்ப்புகளை குவித்து வரும் நரேனின் “ஆத்மா” படம்! எப்போது ரிலீஸ்?