சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லட்சுமிநாராயணன் சேஷூ, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்.
முன்னதாக தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தார்.
கடைசியாக இவர் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த சேஷூ, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது குறித்து லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலாவிடம் ஈடிவி பாரத் செய்தி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, “நானும் அவரும் 22 வருட நண்பர்கள். நல்ல திறமையான நடிகர், சேஷூவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டார். நான் இயக்குநராகும் போது, உங்களை எனது படத்தில் நடிக்க வைப்பேன் எனவும், தமிழ் சினிமாவில் பிரபலமாகி ஒரு ரவுண்ட் வருவீர்கள் என அவரிடம் கூறுவேன்.