சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முக்கியமான இயக்குநராக அறியப்படுபவர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இவரது படங்கள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களாக உள்ளன. கமலை வைத்து விக்ரம், விஜயுடன் மாஸ்டர், லியோ என படங்கள் இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் உடன் கைகோர்த்துள்ளார்.
கரோனா காலகட்டத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேபோல், கமல்ஹாசன் திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த படமாக விக்ரம் மாறியது. இப்படி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக உள்ள லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் உடன் இணைவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் 171வது படமாக உருவாக உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உழைப்பாளி படத்திற்கு இந்த படத்தில் ரஜினி கூலியாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.