சென்னை: இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் காளி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் குரங்கு பெடல். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தோஷ் வேல்முருகன், வசனகர்த்தா பிரபாகரன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், வீடியோ மூலம் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் காளி வெங்கட், "இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். இந்தப் படம் நிறையக் கொடுத்தது. என் வாழ்க்கையில் நெருக்கமான நிறைய விஷயங்களை நினைவு கூர்ந்தது. குரங்கு பெடல் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டப்பட்டது. அவரவர் மொழி மீது அவரவருக்கு ஈடுபாடு இருக்கிறது.
என்னையும், எங்கள் அப்பாவையும் இந்தப் படம் நினைவுபடுத்தியது. அப்போது ஸ்கூல் போகும்போது 10 பைசா கொடுப்பார்கள் இந்தப் படத்தை எல்லோரிடமும் கொண்டு சேருங்கள் என்று கோரிக்கையாக வைக்கிறேன்" என்றார்.
பின்னர், நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான், "முதலில் பிரம்மா இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். வாகை சூட வா படத்துக்குப் பிறகு, இந்த மாதிரியான கிராமத்துக் கதையைப் பண்ணுகிறேன். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று கூறினார்.
பின்னர் பேசிய எழுத்தாளர் பிரம்மா, "ரொம்ப வருடமாக தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் இல்லை என்று தான் நினைக்கிறேன். பசங்க விரும்பக்கூடிய படங்கள் என்றால் வன்முறை படமாகத் தான் இருக்கிறது. பெயர் சொல்ல விரும்பவில்லை. இதே சமூகத்தில் தான் குழந்தைகளுக்கான வன்கொடுமை, ஆசிட் ஊற்றுதல் போன்றவை நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம், நாம் எல்லோரும் தான். நாம் எந்தப் படத்தை ரசிக்கிறோம், எதை ஊக்குவிக்கிறோம் என்பதில் அமைகிறது.