சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன், ரெமோ விஜய்யுடன் பைரவா, சர்கார், ரஜினியுடன் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்தார்.
நாக் அஷ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட நண்பரான ஆண்டனி தாட்டில் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக கூறினார்.
ஆண்டனி துபாயை சேர்ந்தவர் எனவும், இருவரும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக பத்திரிக்கை வெளியானது. இந்நிலையில் இன்று (டிச.12) கீர்த்தி சுரேஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை" - விளாசிய சாய் பல்லவி!
ஆண்டனி தட்டில் தாலி கட்டிய போது கீர்த்தி சுரேஷ் ஆனந்த கண்ணீர் வடித்தார். கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற புடவையும், ஆண்டனி தட்டில் பஞ்சகச்ச உடையும் அணிந்திருந்தனர். அதேபோல் திருமண வரவேற்பின் போது கீர்த்தி சுரேஷ் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் நடித்துள்ள ‘பேபி ஜான்’ திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது.