சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சூர்யா தனது 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் சந்தோஷ் நாராயணன் சூர்யா படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கிறார். படத்தில் பணியாற்றக்கூடிய தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்பான அறிவிப்பை நேற்று படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் வருகிற ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், அங்கு மேற்கொள்ளப்படும் செட் அமைக்கும் பணிகள் குறித்த வீடியோவை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது. சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதேநேரம், கங்குவா சரித்திரப் படமாக உருவாகி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் கேங்ஸ்டர் படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால், கார்த்திக் சுப்புராஜ் கேங்ஸ்டர் படம் எடுப்பதில் வல்லவர். அவரது ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான் ஆகிய படங்கள் அந்த வகைப் படங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் விசேஷம்.. சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்து!