சென்னை: மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்களுக்கு வந்த படம் கங்குவா. இப்படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பாபி தியோல், திஷா பதானி, யோகிபாபு உட்பட நட்சத்திரங்கள் பலர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தனர். பெரும் பொருட்செலவில் சரித்திர கால பேண்டஸி திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்தது. கடுமையான விமர்சனங்களைப் பெற்ற கங்குவா, ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்தவில்லை. அதனால் வியாபார ரீதியில் கங்குவா பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள 97வது ஆஸ்கர் விருது போட்டியில் கலந்துகொள்ள ’கங்குவா’ படத்தை விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு உலகம் முழுவதும் இருந்து 323 திரைப்படங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறந்த படங்களுக்கான தகுதிப் போட்டியின் பிரிவின் கீழ் வருகின்றன. இதிலிருந்து சிறந்த படத்திற்கான ஆஸ்கர் அகாடமி வகுத்துள்ள தகுதிகளை நிறைவு செய்த 207 படங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது ஆஸ்கர் விருது குழு. அந்த பட்டியலில் கங்குவா படமும் இடம்பெற்றுள்ளது. இச்செய்தி சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே உறசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் இருந்தே சமூக ஊடகங்களில் இதுகுறித்து பதிவு செய்து வருகின்றனர். தியேட்டரில் வெளியான போது கடுமையான விமர்சனங்களை சந்தித்த கங்குவா இப்போது ஆஸ்கர் விருது வரை சென்றுள்ளது என பகிர்ந்து வருகின்றனர். ஆஸ்கர் வெளியிட்ட பட்டியலில் கங்குவா மட்டுமல்லாமல் ஆடு ஜீவிதம் (Aadujeevitham – The Goat Life), Girls Will Be girls, சந்தோஷ், All We Imagine as Light, சவர்க்காரின் சுயசரிதையான வீர் சவர்க்கார் - Swatantrya Veer Savarkar ஆகிய இந்திய படங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.