சென்னை: பாலாஜி கேசவன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், அவந்திகா நடித்துள்ள எமக்குத் தொழில் ரொமான்ஸ் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கே.ராஜன், டி.சிவா, எழில், இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை அவந்திகா இருவரும் கலந்து கொள்ளவில்லை.
நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “தமிழில் டைட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் காலத்தில் நிறைய டைட்டில் ஆங்கிலத்தில் வருகிறது. ஆனால், இந்த படத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே வைத்துள்ளார்கள்.
இந்த புரமோஷனுக்கு கூட ஹீரோ, ஹீரோயின் வரவில்லை என்று தயாரிப்பாளர் திருமலை தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சங்கங்கள் சார்பில் சில திட்டங்களை போட்டாலும் அதை மீறுபவர்கள் ஹீரோ, ஹீரோயின். டப்பிங் பேசுவதற்கு முன் பணம் வேண்டும் என்றால் அசிங்கமாக இல்லையா? உன்னை வைத்து படம் எடுக்கிறோம். நம்பிக்கை இல்லையா? ரிலீஸுக்கு பண கஷ்டம் இருந்தால் அந்த நடிகர் கொடுத்து உதவ முன் வர வேண்டும். சரத்குமார், ஜெய்சங்கர் போன்றவர்கள் உதவி செய்தாங்க.
ஆனால், இவர் (அசோக் செல்வன்) புரமோஷனுக்கே வரவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் அடிமையா? நீ என்ன அவ்ளோ பிஸி ஆகிட்டியா? ஒரு இயக்குநர் இல்லை என்றால் ஒரு ஹீரோ, ஹீரோயின் இல்லை. யாராக இருந்தாலும் தலைக்கணம் இருக்கக் கூடாது. நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?