சென்னை:இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால், விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரு வருடமான நிலையில், தயாரிப்பு நிறுவனம் படத்தின் மேக்கிங் வீடியோவை மூன்று பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ள அறிவிப்பு கடந்த ஆக 10 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் அந்த மேக்கிங் வீடியோவின் முன்னோட்டத்தை இன்று (ஆக 12) தனது சமூக வலைத்தள பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும், மேக்கிங் வீடியோ மூன்று பாகங்களாக வரும் ஆக 16 ஆம் தேதி SUN NXT-இல் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது. தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.