சென்னை:சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில், நடிகர் கமல் நடித்து 90களில் வெளியான குணா படத்தின் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் 200 கோடிக்கு அதிகமாக வசூல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்த 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் படத்திற்கு ஒரு உணர்ச்சியாக அமைந்து இருந்தது.
ஆனால், இந்த பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், “பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, முறையான அனுமதி பெற்றுதான் பாடல் பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பு தரப்பு, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல் தொடர்பாக இளையராஜாவின் பிரச்சினை முடித்து வைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.