சென்னை:நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் 'கூலி' (Coolie) என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டீசர் ஒன்றை உருவாக்கியிருந்தார். அந்த டீசருக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
அதில், இளையராஜாவின் இசையில் வெளியான 'டிஸ்கோ டிஸ்கோ' என்ற பாடலின் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த டீசர் மற்றும் இசை வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு நிலையில், இசைஞானி இளையராஜா 'கூலி' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் நிறுவனத்திற்கு தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.
அதில், "கூலி திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் தங்கமகன் படத்தில் இடம்பெறும் 'வா வா பக்கம் வா' என்ற பாடலில் இடம்பெறும் குறிப்பிட்ட வரிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கான முறையான எந்த அனுமதியும் சம்பந்தப்பட்ட யாரும் இளையராஜாவிடம் பெறவில்லை. இளையராஜாவின் அனைத்து பாடல் மற்றும் இசைகளுக்கான முதல் உரிமையாளர் அவரே. ஆனால் அவரின் உரிமையைப் பெறாமல் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது சட்டப்படி குற்றம். குறிப்பாக பதிப்புரிமை சட்டம் 1957-இன் கீழ் இச்செயல் குற்றமாகப்படுகிறது. மேலும், இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து, இதுபோன்று அனுமதி இல்லாமல் அல்லது அனுமதி பெறாமல் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி வருகிறார் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
அதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' (Vikram) திரைப்படத்தில் 'விக்ரம்.. விக்ரம்' என்ற பாடலையும் அவர் தயாரிப்பில் வெளியான 'பைட் கிளப்' என்ற படத்தில் உள்ள 'ஏன் ஜோடி மஞ்ச குருவி' பாடலின் இசையையும் மறு உருவாக்கம் செய்திருந்தனர். இதற்கும் அவர்கள் அனுமதி பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, 'கூலி' படத்தின் டீசரில் இடம் பெறும் இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்தப் பகுதியை நீக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்" என இளையராஜாவின் வழக்கறிஞர் தியாகராஜன் சன் நிறுவனத்திற்கு (Sun Pictures) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜா - வைரமுத்து பிரிவுக்கு காரணம் என்ன? - இருமகா கலைஞர்கள் பிரிந்த பின்னணி! - Vairamuthu Ilayaraja Controversy