சென்னை :ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில், முதல் முறையாக ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா எழுதி, இயக்கி, இசையமைத்துள்ள திரைப்படம் "கடைசி உலகப்போர்". மாறுபட்ட களத்தில், போரின் கொடுமைகளை பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியிருந்த இப்படம் கடந்த செப் 20ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும், இப்படம் விநியோகஸ்தர்களின் தொடர் வேண்டுகோள்களை தொடர்ந்து, வட இந்தியாவில் இந்தி மொழியில் வரும் அக் 4ம் தேதி வெளியாகிறது என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் மட்டுமே இந்தி டப்பிங்கில் வெளியாகி வந்த நிலையில், தற்போது கடைசி உலகப்போர் படமும் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் பான் இந்தியா நடிகராக மாறுகிறார் ஹிப்ஹாப் தமிழா.