சென்னை:தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களில் முக்கியமான இயக்குநராக அறியப்படுபவர் பா.ரஞ்சித். இவர் தனது நீலம் புரொடக்சன் தயாரிப்பு நிறுவனம் மூலம் சமூக நீதி பேசும் படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை பற்றியதாக உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகிறது. சமீபத்தில் தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், "லக்கி பாஸ்கர், தங்கலான் படத்தின் முதல் பாடல் பணிகள் முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டதாகவும், விரைவில் பாடல் வெளியாகும், விரைவில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.