சென்னை: ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்குநராக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் அவரது அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அவருடன் இணைந்து அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், ரபியா கட்டூன், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷின், வொன்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது வரை இதன் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக ஜி.வி.பிரகாஷ் இசையில், சுபலாஷினி, ஜி.வி.பிரகாஷ், தனுஷ், அறிவு இணைந்து பாடியுள்ள 'கோல்டன் ஸ்பேரோ, என் நெஞ்சுல ஏரோ' என்ற பாடலை கடந்த 30ஆம் தேதி வெளியிட்டனர்.
இதையும் படிங்க:ஆண்கள் அடிமையாக இருக்க முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் - இயக்குநர் சீனு ராமசாமி
மேலும், இளைய தலைமுறைக்குப் பிடித்த வகையில், தமிழும் ஆங்கிலமும் சேர்ந்து ரேப் கலந்த ஃபோக் பாடலாக உருவாகி உள்ள இந்த பாடலை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அந்தவகையில், யூடியூப்பில் இந்த பாடல் 10 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் இன்று (செப்.12) தனது 'X' வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுமட்டும் அல்லாது ஜி.வி.பிரகாஷின் அந்த பதிவில், "கோல்டன் ஸ்பேரோ பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளையும், ஸ்பாட்டிஃபையில் 1 மில்லியன் பிளே ஸ்ட்ரீம்களையும் மற்றும் இன்ஸ்டாகிராமில் 20K ரீல்களையும் பெற்றுள்ளது. இதற்காக என் இயக்குநர் தனுஷுக்கு நன்றி. இது ஒரு ஆரம்பம் தான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இருந்து எங்களிடம் இன்னும் மூன்று ராக்கிங் டிராக்குகள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படும் நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மூன்று ராக்கிங் டிராக்குகள் உள்ளதாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ள X' வலைதள பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.