சென்னை: நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு 'வல்லவன்', 'மன்மதன்' ஆகிய படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘உறவை காத்த கிளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சிலம்பரசன். ரசிகர்களால் எஸ்டிஆர், சிம்பு என அழைக்கப்படும் சிலம்பரசன் அதற்கு பிறகு ’காதல் அழிவதில்லை’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை அவரது தந்தை டி.ராஜேந்தர் இயக்கினார்.
இதனைத்தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், 2004ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த ’மன்மதன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிலம்பரசன் உருவெடுத்தார். இதனைத்தொடர்ந்து 2005இல் வெளியான ’தொட்டி ஜெயா’ படத்தில் வித்தியாசமான நடிப்பு மூலம் வரவேற்பைப் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து 2006இல் சிலம்பரசன் இயக்கி, நடித்த ’வல்லவன்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் அவரது திரை வாழ்வில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் சிலம்பரசனின் நடிப்பை திரைத்துறையினர் அனைவரும் பாராட்டினர். காதலர்களால் போற்றப்படும் திரைப்படமாக விண்ணைத்தாண்டி வருவாயா அமைந்தது.