சென்னை: தமிழ் சினிமாவில் முதல் திருநங்கை இயக்குநர் சம்யுக்தா விஜயன் நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'நீல நிறச் சூரியன்' (blue sunshine). இப்படம் நாளை (அக்.04) திரையரங்குகளில் வெளியாகிறது. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து கொண்டு, திரைப்படம் இயக்கியுள்ள சம்யுக்தா விஜயன் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ”பொள்ளாச்சியில் பிறந்து, கோவையில் படித்தேன். எனக்கு பெற்றொர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அதனால் நான் படிப்பில் நன்றாக கவனம் செலுத்தினேன். தற்போது அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறேன்” என்றார்.
சினிமா பயணம் குறித்து பேசுகையில், “நீல நிற சூரியன் படத்தை இயக்கியதுடன், தயாரித்து, நடித்தும் உள்ளேன். இன்று (அக்.04) திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. லாக்டவுன் சமயத்தில் தென்கொரியாவில் இருந்த போது இக்கதையை எழுதி இயக்க வேண்டும் என்று தோன்றியது. இதுவரையில் தமிழ் சினிமாவில் திருநங்கைகள் பற்றி வந்த படங்கள் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை.
சினிமாவில் திருநங்கைகளை கேலி, கிண்டலாகவும் அல்லது பரிதாபகரமாகவும் காட்சிப் படுத்தியுள்ளனர். திருநங்கைகளை சினிமாவில் அறிவார்ந்தவர்களாக காட்டி இதுவரை நான் பார்த்ததில்லை. அந்த குறையை தீர்க்க தான் நான் இப்படத்தை எடுத்துள்ளேன். சமூகத்தில் திருநங்கைகள் நிறைய பேர் பெரிய பணிகளில் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையை சொல்ல யாரும் முற்படவில்லை. நாம் சொல்லாமல் யார் சொல்வார்கள் என்ற அடிப்படையில் இப்படத்தை எடுக்க நினைத்தேன்” என்றார்.
’நீல நிறச் சூரியன்’ திரைப்படம் உருவாக்கிய அனுபவம் குறித்த கேள்விக்கு, "நான் முதல்முறையாக நடிப்பதால், நல்ல நடிகர்களை இப்படத்தில் நடிக்க வைக்க நினைத்தேன். கிட்டி, கஜராஜ், மனிமேகலை உள்ளிட்ட நடிகர்களிடம் இப்படம் குறித்து சொன்னதும் சம்மதம் தெரிவித்தனர். திருநங்கைகள் பற்றி இவ்வளவு அழுத்தமாக சொல்லும் படங்கள் குறைவு தான்.
அதேபோல் படத்தின் தொழில்நுட்ப குழுவும் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சமூக பிரச்சனைகளை பேசும் படமாக இருந்தாலும், சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்று மக்களின் எதிர்பார்ப்பு இருக்கும். அவ்வாறு கொடுக்க முடியுமா என்று சந்தேகம் இருந்தது. இக்கதையை இரண்டு ஆண்டுகள் எழுதினேன். இப்படம் உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது" என்று கூறினார்.