சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தமவில்லன். இப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. அப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நஷ்டத்தை ஈடு செய்ய, கமல்ஹாசன் மீண்டும் ஒரு படம் நடித்து தருவதாக உறுதி அளித்திருந்தார் எனவும், ஆனால், தற்போது வரை கமல்ஹாசன் தரப்பு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதால் இதனால் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ் சந்திர போஸ், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சங்கம் சார்பில் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மன்னன், விநியோகஸ்தர் சங்கத்தின் அருள்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து நஷ்ட ஈடாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு இன்னொரு படம் செய்து தருவதாக நடிகர் கமல்ஹாசன் உறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது வரை 9 ஆண்டுகளாக இதை பற்றி கமல்ஹாசன் எதுவும் பேசாமல் இருப்பதால், அவர் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், நடிகர் கமல்ஹாசனை சந்தித்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சில சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும், அதன் பின்னர் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி உள்ளிட்ட யாரும் பேச்சுவார்த்தை குறித்து எதுவும் பேசவில்லை. விரைவில் கமல்ஹாசனை சந்தித்துப் பேசிய பிறகு தான் அதிகாரப்பூர்வமாகத் தெரிய வரும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி! - 10th Exam Results