சென்னை: இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் இயக்குநராக 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பாலா. பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த ’சேது’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது. பாலா இயக்கத்தில் முதல் படமான சேது (1999), விக்ரம் திரை வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
சேது படத்தில் விக்ரமின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. விக்ரம் என்னும் நடிகரின் முழுத் திறமையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய படமாக சேது அமைந்தது. அப்படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை உலுக்கியது. இதனைத்தொடர்ந்து சூர்யா நடித்த நந்தா(2001), திரைப்படத்தை பாலா இயக்கினார். நந்தா திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் விக்ரம், சூர்யாவை வைத்து பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக பாலா உருவெடுத்தார். அதற்கு பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்கள் இயக்காமல் இருந்த பாலா, 2009ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்து நான் கடவுள் படத்தை இயக்கினார். இப்படத்தில் அகோரியாக ஆர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் பாலா இயக்கிய அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.