மயிலாடுதுறை:லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஞானவேல்ராஜா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' (Vettaiyan) திரைப்படம் இன்று (அக்.10) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரோகிணி, ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விஜயா திரையரங்கம், சீர்காழி பாலாஜி திரையரங்கம் ஆகிய இரண்டு திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: "ரஜினி பட FDFS விஜய், அஜித் படங்களை விட மாஸா இருக்கு"... திருச்சியில் ’வேட்டையன்’ ரிலீஸ் கொண்டாட்டம்!
இந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள விஜயா திரையரங்கில் வேட்டையன் திரைப்படம் வெளியானதை அடுத்து, ரசிகர்கள் எந்தவொரு ஆராவாரமும் இன்றி வரிசையில் நின்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படம் பார்க்க சென்றனர். அப்போது, மயிலாடுதுறை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் டி.எல்.ராஜேஸ்வரன் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்தும் கண் கண்ணாடியை அணிந்து வந்தது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் ரிலீஸ் ஆகப்போவது என்றாலே திரையரங்குகளில் முன்கூட்டியே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும், ஆனால் தற்போது குறைவான கூட்டத்துடன் எந்த ஒரு ஆராவாரமுமின்றி ரஜினி ரசிகர்கள் படம் பார்க்க வந்தனர். இப்படத்தின் இடைவேளை நேரத்தின்போது பட்டாசு வெடித்தும், ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் டி.எல்.ராஜேஸ்வரன் தலைமையில் ரசிகர்கள் திரையரங்கு முன்பு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டுமென்று, ஒரு நிமிடம் ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் நகரச் செயலாளர் பவுன் முருகானந்தம், செந்தில் ஒன்றிய செயலாளர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்