சென்னை: தமிழ் சினிமா எத்தனையோ இயக்குநர்களை பார்த்துள்ளது. அவற்றில் ஒரு சிலரே தோல்வியே இல்லாமல் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர்களாக வலம் வருகின்றனர். அந்த வகையில், நமது பிடித்த ஆதர்ச நாயகன் இந்த இயக்குநரது படத்தில் நடிக்கமாட்டாரா என ஏங்க வைப்பவர் வெற்றிமாறன்.
இவர் சாதாரண கதையை ரத்தமும், சதையுமாக காட்சிப்படுத்தி படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுப்பவர். பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறன், 'பொல்லாதவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து 'ஆடுகளம்' படத்தின் மூலமாக தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றார். 'ஆடுகளம்' படத்தைப் பார்த்த அவரது குருவான இயக்குநர் பாலு மகேந்திரா, “என்னடா இப்படி படம் எடுத்து வச்சுருக்க, நல்ல நடுவர் குழுவாக இருந்தால் உனக்கு ஆறு தேசிய விருது கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அதேபோல் ஆடுகளம் படம் 6 தேசிய விருதுகளை வென்றது. வெற்றிமாறன் திரைப்படங்கள் பெரும்பாலும் மனித மனங்களின் குரூரத்தை பேசக்கூடியதாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராக கேள்வி எழுப்புவதாகவும் இருக்கின்றன.
வேலூர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த வெற்றிமாறன், மிகத்தீவிர கிரிக்கெட் வெறியர். இவரின் அப்பா கால்நடை ஆராய்ச்சியாளர், தாய் ஆசிரியை, ஒரு சகோதரி என்று சிறிய குடும்பத்தில் பிறந்த வெற்றிமாறன் திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சினிமாவில் பயிற்சி பெறுவதற்காக சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்தார்.
அதன் பிறகு திரை உலகத்தில் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளும் வெற்றிமாறன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இணைந்தார். பாலு மகேந்திரா இயக்கிய கதை நேரம் தொடரில் பணியாற்றிய வெற்றிமாறனுக்கு நடிகர் தனுஷ் உடன் நட்பு ஏற்பட, தனுஷிடம் தான் உருவாக்கிய கதையை வெற்றிமாறன் கூறியுள்ளார்.
அந்த கதை தனுஷிற்கு பிடித்து போக இருவரும் இணைந்து உருவான படம் தான் 'பொல்லாதவன்'. அந்த படம் கொடுத்த வெற்றி நம் அனைவரும் அறிந்ததே. இளைஞர்களிடம் இந்த படம் மிகப்பெரிய வரவேற்ஐ பெற்றதால், முதல் படத்திலேயே வெற்றிமாறன் ஒட்டுமொத்த திரை உலகின் கவனத்தையும் பெற்றார்.
அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'ஆடுகளம்' திரைப்படம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி சூழலை மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் காட்சிப்படுத்தியிருந்தது. இந்தப் படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.