சென்னை: அரங்கத்தை தன் வசப்படுத்தும் குத்து பாடல்கள் முதல் மெலடி பாடல்கள் வரை 2k கிட்ஸ் இசை நாயகனாக வலம் வருபவர் அனிருத். இவரது தந்தையும், லதா ரஜினிகாந்தின் சகோதரருமான ரவி ராகவேந்தர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாத்துறை பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த அனிருத், இளம் வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். சவுண்ட் இன்ஜினியரிங் மற்றும் கர்நாடக இசையை முறைப்படி கற்றுத் தேர்ந்தார். அவரது திறமையை முதலில் கண்டறிந்தவர் தனுஷ். இதனையடுத்து அனிருத்திற்கு '3' படம் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் பட வாய்ப்பு வழங்கினார்.
முதலில் உறவினர் என்ற முறையில் வாய்ப்பு கிடைத்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் 'ஒய் திஸ் கொலவெறி' (why this kolaveri) பாடல் அந்த பார்வையை முற்றிலும் நீக்கியது. இந்த பாடல் படக்குழுவே எதிர்பார்க்காத அளவிற்கு உலக அளவில் ஹிட்டானது. 3 படத்தின் பின்னணி இசை ஒரு அனுபவம் வாய்ந்த இசைக்கலைஞரின் இசையமைத்தது போன்ற உணர்வு அளிக்கும். இதனைத்தொடர்ந்து அனிருத் டேவிட், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என வரிசையாக பல்வேறு ஹிட் ஆல்பங்களை வழங்கி கவனம் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி(VIP), கத்தி ஆகிய படங்கள் அனிருத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது என கூறலாம். VIP, கத்தி ஆகிய படங்களில் இவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்றளவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரஜினி, விஜய், கமல், அஜித் ஆகியோரது படங்களில் அவர்களது நட்சத்திர பிம்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் பின்னணி இசையை அந்தந்த படங்களின் சூழலுக்கு ஏற்ப உருவாக்கி அசத்துவார். ஜெயிலர் வெற்றி விழாவில் ரஜினி, ’சுமாரான படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது அனிருத் இசை தான்’ என வெளிப்படையாக கூறி இருந்தார்.
குறிப்பாக தனுஷ் நட்சத்திர அந்தஸ்துடன் மாஸ் ஹீரோவாக உயர விஐபி, மாரி ஆகிய ஆல்பங்கள் முக்கிய காரணமாக அமைந்தது. அனிருத் இந்திய அளவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக வலம் வருவார் என தனுஷ் ஆரம்பத்திலேயே கணித்ததாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.