பீகார்: ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா(72) உயிரிழந்தார். 1952ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பீகார் மாநிலத்தில், சுபல் மாவட்டத்தில் உள்ள ஹுலாஸ் கிராமத்தில் பிறந்தவர் சாரதா சின்ஹா.
1970களில் சாரதா சின்ஹா தனது நாட்டுப்புற இசைப் பயணத்தை தொடங்கினார். பின்னர் பாலிவுட் திரைப்படங்களிலும் பல்வேறு பாடல்களை பாடினார். குறிப்பாக 1994இல் வெளியான ‘Hum aapke hain koun’ என்ற படத்தில் இடம்பெற்ற பாபூல் பாடல் மிகவும் பிரபலமடைந்தது. மத்திய அரசு நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹாவை கௌரவப்படுத்தும் வகையில் 2018இல் பத்ம பூஷன் விருது வழங்கியது.
நாட்டுப்புற இசையை பிரபலப்படுத்தும் நோக்கில் பீகார் மாநில அரசு சாரதா சின்ஹாவை மாநில கலாச்சார தூதராக நியமித்தது. சாரதா சின்ஹா பாடகராக மட்டுமின்றி, இசை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சாரதா சின்ஹா 2000ஆம் ஆண்டில் மிகவும் பெருமை வாய்ந்த sangeet natak akademi விருதை வென்றார். பின்னர் 2006ஆம் ஆண்டில் National ahilyabai sevi samman விருதை வென்றார்.