சென்னை: 4 கிராமி விருதுகள், யூட்யூபில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்கள், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் என உலகளவில் பெரும் புகழில் இருப்பவர் இசைக்கலைஞர் எட் ஷீரன் (Ed Sheeran). லண்டனைச் சேர்ந்த இவரது படைப்புகள் உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்று வரும் நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நேற்று(பிப்.05) நடைபெற்றது. இதனால், சென்னை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. ஏனென்றால் இந்த இசை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். மேலும் பல ஆயிரம் பேர் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
எட் ஷீரன் இசைக்கச்சேரியில் அவரது புகழ்பெற்ற பாடல்கள் பாடப்பெற்றன. அப்போது எட் ஷீரன், உலகளவில் பிரபலமான கிராமி விருது ஒஎற்ற தனது ‘Shape Of You’ பாடலை மேடையில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்த ஏ.ஆர்.ரகுமானைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
ரசிகர்களின் ஆர்ப்பரிப்புகளுக்கிடையே ரகுமான்‘ஊர்வசி..ஊர்வசி..டேக் இட் ஈசி ஊர்வசி..’ பாடலை பாடிக்கொண்டே கீ-போர்ட் உடன் மேடையேறினார். 1994ல் வெளியான காதலன் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது. ரகுமானின் சர்வதேச ஹிட்லிஸ்டில் ஒன்று.ஒரு பக்கம் ஏ.ஆர்.ரகுமான் ஊர்வசி பாடலை பாட, இன்னொரு பக்கம் எட் ஷீரன் ‘ஷேப் ஆஃப் யூ’ பாடலை பாடினார்.
இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர். இருவரும் இணைந்து புதுவிதமான ரிமீக்ஸ் இசையை மக்களுக்கு அளித்தனர். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த ரிமீக்ஸ் இசைதான் நெட்டிசன்களின் உபயோகத்தில் இருக்கும். எட் ஷீரனின் இந்த இசை நிகழ்ச்சியில், பிரபல பாடகி ஜோனிடா காந்தியும் கலந்து கொண்டார்.
எட் ஷீரன், தனது இசைக்கச்சேரிக்கு முன்னதாக ஏ.ஆர்.ரகுமானையும் அவரது மகன் அமீனையும் அவர்களது வீட்டிற்கு சென்று சந்தித்தார். அதன் புகைப்படங்கலை அமீன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களில் இவர்கள் இசைக்கருவிகளுடன் இருக்கும் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டிருந்தது.
ப்ரிட்டீஷ் பாடகரான எட் ஷீரன், இசை நிகழ்ச்சிக்கிடையே தான் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தியதற்கான காரணத்தையும் தெரிவித்தார். இந்தியாவிற்கு தான் வருவது இது 4வது முறை எனக்கூறிய அவர், எப்போதும் டூர் வரும் போது, மும்பை-டெல்லி உள்ளிட்ட இடங்களில் மட்டும் இசை நிகழ்ச்சி நடத்துவதாகவும் கடந்த 2 முறை வரும் போது சென்னையில் நடத்தலாம் என முடிவு செய்ததாகவும் பேசினார். சென்னை மக்கள் தன்னை அன்புடன் வரவேற்றதாகவும் அவர் கூறினார். எட் ஷீரன் அடுத்ததாக பெங்களூருவில் வருகிற எட்டாம் தேதி தனது இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:”நாங்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை”... முதல் நாள் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் வருத்தம்
கடைசியாக சென்னையில் நடந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சி பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து இனி சென்னையில் இனி இசை நிகழ்ச்சியே நடத்தக்கூடாது என ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு, அவர் இப்போதுதான், சென்னையில் வேறு ஒரு இசை நிகழ்ச்சியில் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.