சென்னை: ’மதகஜராஜா’ திரைப்பட வெற்றியை தொடர்ந்து துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்தில் விஷாலுடன் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த ‘மதகஜராஜா', தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ஒரு வழியாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு வெளியானதால் ’மதகஜராஜா’ படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த காலத்திற்கு ஏற்றவாறு அப்டேட்டடாக இருக்குமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. மதகஜராஜா திரைப்படம் வெளியாகி இதுவரை 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது படக்குழுவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு சந்தானத்தின் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் சுந்தர்.சி முதல் ரசிகர்கள் அனைவரும் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.