சென்னை: கோட் படத்தின் கதைக்கும் ராஜதுரை படத்தின் கதைக்கும் ஒற்றுமை இருந்தது எனக்கு கோட் ரிலீசுக்கு பிறகு தான் தெரியும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கோட்' (GOAT). இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கோட் திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வயதான விஜய் கதாபாத்திரத்திற்கு எதிராக அவரது மகன் இளம் விஜய் கதாபாத்திரம் செயல்படுவது போன்று கதைக்களம் அமைந்திருக்கும். ஜீவனாக இளம் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே 'கோட்' படம் வெளியான போது இக்கதை விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்தின் கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கிண்டலடித்து வந்தனர். நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1993இல் வெளியான திரைப்படம் ‘ராஜதுரை’. இப்படத்திற்கு விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் கதை எழுதியுள்ளார்.