சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’ (The Greatest of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தில் இருந்து 'விசில் போடு', 'ஸ்பார்க்' உள்ளிட்ட மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கோட் படத்தின் டிரெய்லர் குறித்து இன்று (ஆகஸ்ட் 14) மாலை அப்டேட் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், மாநாடு படத்திற்குப் பிறகு தமிழில் வெங்கட் பிரபு விஜயை வைத்து இயக்குவதால் கோட் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, கோட் படம் குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்தும், அவருக்கு அஜித்துடன் உள்ள நட்பு குறித்தும் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு கூறியது, “நடிகர் அஜித் 'மங்காத்தா' படத்தில் நடிக்கும் போதே அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்குங்கள், நல்லா இருக்கும் என கூறினார். தற்போது கோட் படம் இயக்கப் போவதாக அஜித்திடம் கூறிய போது, "எத்தனை வருஷமா சொல்றேன், நல்லா பண்ணு" என கூறினார். இதனையடுத்து சமீபத்தில் நடிகர் அஜித் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது அவரை பார்க்கப் போவதாக நடிகர் விஜயிடம் சொன்ன போது, "போனதும் போன் போட்டு கொடு" என்றார்.