சென்னை: தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர், தங்கர் பச்சான். கிராமத்து வாழ்வியலை எதார்த்தமாக திரையில் படம் பிடித்துக் காட்டும் ஒருசில இயக்குநர்களில் முக்கியமானவர் இவர். இவரது சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், அழகி ஆகிய படங்கள் இன்று வரையிலும் சிறந்த படங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தனது கல்வெட்டுகள் சிறுகதையை தழுவி, 2002ஆம் ஆண்டு தனது முதல் படமாக அழகியை எடுத்திருந்தார் தங்கர் பச்சான். அதில் பள்ளிப்பருவத்து முதல் காதலை அழகியலுடன் சொல்லியிருப்பார். இப்படத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படமும் ரசிகர்களைக் கவர்ந்தது.
உதயகீதா சினி கிரியேஷன்ஸ் உதயகுமார் தயாரித்த முதல் காதலின் நினைவுகளைப் பேசும் இப்படம், இக்கால தலைமுறையினரை மகிழ்விக்க மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. முதல் காதல் என்பது எல்லோருடைய வாழ்விலும் மறக்க முடியாத தருணம். அதிலும் பள்ளிப் பருவத்தில் வரும் முதல் காதல், வாழ்வின் இறுதி நாட்கள் வரையிலும் அழகிய நினைவாக வாழ்ந்துகொண்டே இருக்கும்.
அப்படியான முதல் காதலில் மூழ்கிய ஒருவன், தன் காதலியைச் சந்திக்க நேரிட்டால் என்னவாகும் என்பதுதான் இப்படத்தின் கதை. எல்லோரின் பள்ளிக்கால நினைவுகளைக் கிளறிவிட்ட இப்படம், அனைவரின் முதல் காதல் நினைவுகளையும் தூண்டிவிட்டது. வெற்றி பெறாத முதல் காதல் நினைவுகளை, மூன்று பருவங்களை தாண்டிச்செல்லும் ஒரு மனிதனின் உள்ளுணர்வுகளை, அதுவரை தமிழ் சினிமா காட்சிப்படுத்தாத வகையில் மிக இயல்பாக இப்படம் காட்சிப்படுத்தியது.
தமிழ் சினிமாவின் எந்த இலக்கணங்களுக்கு உள்ளும் சிக்காத இப்படம், தமிழ் சினிமாவில் பொன்னால் பொறிக்கப்பட்ட காதல் காவியமாக, அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது. மேலும், அஜித் நடித்த ரெட், கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படங்களோடு வெளியான இப்படம், மற்ற அனைத்து படங்களையும் ஓரம் கட்டி, குக்கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்கள் வரை சென்று ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றதோடு, திரையரங்குகளில் 175 நாட்களைக் கடந்து ஓடியது.
இந்நிலையில், மீண்டும் வெளியாகும் அழகி படம், இக்கால தலைமுறையினருக்கு அக்காலகட்ட வரலாற்றைச் சொல்வதுடன், காதலைக் கொண்டாடும் வாய்ப்பாக அமையும். உங்கள் காதலி, உங்கள் காதலனை திருமணத்துக்கு பிறகு சந்திக்க நேர்ந்தால், நீங்கள் முதலில் பேச நினைப்பது என்னவாக இருக்கும் என்பதே மிகப் பெரிய சுவாரசியம் தான். இந்த சுவாரசியம், படம் முழுக்க இருக்கும். மார்ச் 29ஆம் தேதி முதல் 4K, 5:1 தொழில் நுட்பத்துடன் திரையில் மீண்டும் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க:"எனக்கு உடல் நலக்குறைவா?" ஒரே போட்டோவில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்!