சென்னை: இயக்குநர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்தியன் 2' (Indian 2). இப்படத்திற்கான, ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் அனிருத், பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் நடிகர் சித்தார்த், "20 வருடங்களுக்கு முன்னர் சினிமாவில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஷங்கருக்கு மிகப்பெரிய நன்றி. மீண்டும், 21 வருடம் கழித்து இன்று கமலுடன் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். அதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 7 வருடங்களில் நான் நடித்த படங்களில், கதாபாத்திரம் தேடுவதை எஞ்சாய் செய்து தேடினேன்.
சிறு வயதிலிருந்தே கமலின் தீவிர ரசிகன். கமல் இல்லை என்றால் நான் ஒரு நடிகனாக இல்லை. ஏனென்றால் கமல் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அதேபோல, ஷங்கருக்கும் கமலை பிடிக்கும். இந்த காலகட்டத்தில் ஒருவன் திரும்ப வந்த எப்படி இருக்குமோ? அப்படிதான் இந்தியன் 2. தாத்தா திரும்ப வராரு குறிச்சு வச்சுக்கோ.. நான் மிகவும் காதலித்து நடித்த படம் இது" என்றார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசிய போது, "இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது ஸ்பெஷலாக இருந்தது. படக்குழுவினர் அனைவரும் அவ்வளவு கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். இப்படி நான் பார்த்ததே இல்லை. ஸ்டூடியோவில் பார்த்த ட்ரெய்லரை பெரிய திரையில் பார்க்கும் போது இன்னும் நன்றாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இயக்குநர் ஷங்கர் கூறியதாவது,"இந்தியன் தாத்தா தமிழ்நாட்டில் நடப்பது போன்று இருந்தது. ஆனால், இந்தியம் 2 மற்ற மாநிலங்களுக்கும் விரிந்து இருக்கிறது. படம் முடியும் பொழுது ஒவ்வொருவரையும் யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
கமல் சூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே வந்துவிடுவார், மீண்டும் படப்பிடிப்பு முடிந்து அனைவரும் சென்ற பிறகு கடைசியாகத் தான் செல்வார். ஏனென்றால் அந்த அளவிற்கு அவரது உழைப்பு உள்ளது. மேலும், அவரது மேக்கப்பை கலைக்கவும் 1 மணி நேரம் ஆகும். அட்வான்ஸ்டு மேக்கப் போடப்பட்டுள்ளதால், இந்தியன் படத்தைவிட, இந்தியன் 2 படத்தில் கமலை அதிகம் தெளிவாகப் பார்க்க முடியும்.