சென்னை:இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் வித்தியாசமான படங்களை இயக்குவதிலும், வேடிக்கையாகப் பேசுவதிலும் பெயர் போனவர். இவரது சமீபத்திய படமான 'ஒத்த செருப்பு' ஒரே ஒருவரை வைத்து இயக்கப்பட்டது. அதேபோல் 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என போற்றப்பட்டது.
அந்த வகையில், தற்போது 13 விடலைப் பருவ குழந்தைகளை வைத்து 'டீன்ஸ்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இந்த விழா நடைபெற்றது. மேலும், டீன்ஸ் படத்தின் ட்ரெய்லரை இன்று மாலை 6 மணிக்கும் இயக்குநர் மணிரத்னம் வெளியிடுகிறார்.
இந்த விழாவில் இயக்குநர்கள் பாக்யராஜ், கே.எஸ் ரவிக்குமார், பேரரசு, சரண், விருமாண்டி, இசை அமைப்பாளர் இமான், வனிதா விஜயகுமார், ரோபோ சங்கர், யோகி பாபு, புகழ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அப்போது இந்நிகழ்ச்சியில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், “ சில மாதங்களுக்கு முன் பார்த்திபன் இந்த கதையை என்னிடம் சொன்னார். ரொம்ப யுனிக்காக இருந்தது.
இது தமிழ் சினிமாவுக்கு புதிய படமாக இருக்கும். இந்த படத்தில் இமான் இசையில் பாடல்கள் வெரைட்டியாக உள்ளது. பாடல்களை அளவெடுத்துச் செய்துள்ளனர். நான் வீட்டில் ஒரு டீன் ஏஜரை மேய்ப்பிற்குக் கஷ்டப்படுகிறேன். நீங்கள் எப்படி இத்தனை பேரைச் சமாளித்தீர்கள்” என்று பேசினார்.