சென்னை: ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரெபல்'. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரெபல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "ஜி.வி.பிரகாஷ் மிகவும் கடுமையாக உழைக்கக் கூடியவர். இப்படத்திற்கு இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து இருக்கிறார். அந்த காலகட்டத்திற்கு நம்மைக் கொண்டு போகக்கூடிய படமாக ரெபல் திரைப்படம் இருக்கும்” என்றார். பின்னர் பேசிய இயக்குநர் நிகேஷ், “படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்தார். அதே போல தனஞ்செயனுக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி” எனக் கூறினார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என் வேலையை நான் சரியாகச் செய்து வருகிறேன் என நினைக்கிறேன். 'ரெபல்' படம் மூணாரில் எடுக்கப்பட்ட படமாகத் தெரிகிறது. இரு மொழி அரசியலைப் பேசும் என நினைக்கிறேன். படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன், வாழ்த்துக்கள் ஜி.வி.பிரகாஷ். அவருடன் தங்கலான் படத்தில் பணியாற்றி வருகிறேன். மிகவும் இயல்பான மனிதர், தங்கலான் படத்தில் அவரது உழைப்பு தெரியும். அவர் எனது தயாரிப்பில் நடித்து வருகிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கக் கூடியவர்.
ஞானவேல் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய நபர். படம் நன்றாக வந்துள்ளது. சின்ன படங்களுக்கு உதவ வேண்டியது முக்கியமானது. சின்ன படங்களை எடுத்து திரையரங்கிற்குக் கொண்டு வருவதே மிகவும் சிரமமாக உள்ளது. எனது சமீபத்திய படம் ஜெ.பேபி படம் வணிக ரீதியாக வெற்றியா என்றால் கேள்வியாக இருக்கிறது. ஆனால், படம் பார்த்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.