சென்னை: தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். 1990 காலகட்டங்கள் முதல் பல மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநராக அறியப்படுபவர் கே.எஸ். ரவிக்குமார். 1990ல் ‘புரியாத புதிர்’ படத்தில் தொடங்கி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், சரத்குமார் ஆகியோரை வைத்துபல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார்.
இவரது படங்கள் இப்போதுள்ள தலைமுறையினரையும் ரசிக்க வைக்கும். நாட்டாமை, நட்புக்காக, முத்து, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம், படையப்பா என இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்துமே கமர்ஷியல் வெற்றி படங்களாக அமைந்தது. ரஜினி, கமல் தொடங்கி தனுஷ், சிம்பு வரை அனைவருடனும் பணிபுரிந்துள்ளார்.
மேலும் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் நேற்று மாலை உயிரிழந்தார்.
இதையும் படிங்க: அல்லு அர்ஜூன் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள், உச்சகட்ட மாஸ் கிளைமாக்ஸ்; 'புஷ்பா 2' விமர்சனம் என்ன?
இந்த தகவலை ரவிக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ருக்மணி அம்மாளின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்த வருகின்றனர். சென்னை சின்னமலை பகுதியில் உள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் இல்லத்தில் அவரது தாயார் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.