திருச்சி:இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் டீசர் வெளியீட்டுக்காக, இயக்குநர் ஹரி திருச்சி மெயின்காட்கேட் பகுதியில் உள்ள எல்.ஏ திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார்.
இதையடுத்து, டீசர் வெளியிட்ட உடன் திரையரங்க மேடையில் அமர்ந்து ரசிகர்களோடு பட டீசரை கண்டு மகிழ்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தரமான படத்தை கொடுக்க 20 வருடமானாலும் பரவாயில்லை. நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம் என்று ஆடியன்ஸ் தயாராகி விட்டார்கள். எனவே, நல்ல படங்களை கொடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த படம் நானும், விஷாலும் இணைந்து பணியாற்றும் 3வது படம்.
படத்தில் ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் மிகவும் விறுவிறுப்பாக செய்துள்ளோம். முகம் சுழிப்பது போல் எதுவும் இருக்காது. எனவே, குடும்பத்துடன் இந்த படத்தைப் பார்க்கலாம். விஜய்யின் டேட்ஸ் (Dates) கிடைத்தால், அவரை வைத்து திரைப்படம் எடுத்துவிடுவேன். கதையெல்லாம் தயாராக தான் உள்ளது. அவரே சொல்லி இருக்கிறார், முதலில் மக்கள் சேவை செய்துவிட்டு, அடுத்தது சினிமாவுக்கு செல்கிறேன் என்று.
அரசியல் நல்லது தான். இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு நடிகர், சேவை செய்யப் போவதாக சொல்வது போற்றப்பட வேண்டிய வார்த்தை. இதனை அரசியல்வாதிகளே பெரிய விஷயமாகக் கருதுகின்றனர். அவர் நல்லபடியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். விஷால் அரசியலுக்கு வருவது குறித்து எனக்குத் தெளிவாக தெரியாது. அவர் அதை வேறு விதமாக சொல்லியுள்ளார்.
ரத்தினம் படத்தில் 4 சண்டை பயிற்சியாளர்களைக் கொண்டு காட்சி அமைக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் உள்ளது. இந்த மாஸ்டரை வைத்து குறிப்பிட்ட சண்டைக் காட்சிகளை செய்தால் நன்றாக இருக்கும் என்பது ஒரு காரணம். மற்றொன்று, ஒரே செட்யூலில் (schedule) அனைத்து காட்சிகளையும் முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், ஒவ்வொருவராக பயன்படுத்திக் கொண்டோம்.