சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ’கோட்’ (Greatest of all time) திரைப்படம் வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கோட் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் கோட் படத்தின் டிரெய்லர் நாளை (ஆகஸ்ட் 17) மாலை வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் தான் தீவிர அரசியலில் ஈடுபட போவதால் தற்போது கமிட் செய்துள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகப் போவதாகவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து கோட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டிலும், ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது. இயக்குநர்கள் அட்லி, ஷங்கர், எச்.வினோத் என பல பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில் எச்.வினோத் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது தற்போது உறுதியாகியுள்ளது.