சென்னை: தமிழ் சினிமாவில் 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமான பாடலாசிரியராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பல்வேறு நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். குறிப்பாக அனிருத் காம்போவில் அதிக ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
சிலம்பரசன் நடிப்பில் இவர் இயக்கிய 'போடா போடி' முதல் தற்போது வரை அனிருத் இசையமைத்துள்ள பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். ஆனால் விக்னேஷ் சிவன் எழுத்தில் அனிருத் இசையமைப்பில் ’நானும் ரௌடி தான்’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
மனித உணர்ச்சிகளை இந்த தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் எழுதியதில் இவரது பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றது. விக்னேஷ் சிவன் கருப்பு வெள்ளை, அதாரு அதாரு என மாஸ் பாடல்கள் எழுதியிருந்தாலும், அவரது காதல் பாடல்களுக்கு ரசிகர்கள் மனதில் தனியிடம் உண்டு. அவ்வாறு விக்னேஷ் சிவன் எழுதிய காதல் பாடல்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.
’சிரிக்காதே’ (ரெமோ): பாக்யராஜ் கண்னன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையமைத்த திரைப்படம் 'ரெமோ'. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கெமிஸ்ட்ரி இளைஞர்கள் மனதை கவர்ந்தது. அதற்கு முக்கிய காரணமாக அனிருத் இசையமைத்த பாடல்கள் மற்றும் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள். குறிப்பாக ’சிரிக்காதே’ பாடல் வரிகள் எளிதான தமிழ் வார்த்தைகளுடன் 2கே கிட்ஸ் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.
’தங்கமே’ (நானும் ரௌடி தான்): விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த திரைப்படம் 'நானும் ரௌடி தான்'. அனிருத் இசையமைப்பில் இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் விக்னேஷ் சிவனே எழுதியிருந்தார். அதில் வெளியான உடனே ஹிட்டடித்தது 'தங்கமே' பாடல். இதில் டம்மி ரௌடி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.