சென்னை:ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து, மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குநர் அமீர் கதாநாயகனாகவும், சாந்தினி ஶ்ரீதரன் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார், இசையமைப்பாளர் வித்யாசாகர். இத்திரைப்படம் உலகெங்கிலும் நாளை (மே 10) வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் குறித்து பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் படம் பண்ணுவதற்கான காரணம் என்ன?அமைதிப்படை படத்திற்குப் பிறகு தமிழில் அரசியல் நையாண்டி படம் அதிகமாக வரவில்லை. இப்படத்தில் சமகால அரசியலை கிண்டல் செய்தும், தமிழ் மீது உள்ள பெருமைகளைப் பேசக்கூடிய படமாக பார்க்கிறேன். இன்னும் நிறைய அரசியல் நையாண்டி படங்கள் வர வேண்டும் என்பது என் ஆசை. நான் அதனை ஒரு ரசிகனாகவும், படைப்பாளியாகவும் எதிர்பார்க்கிறேன்.
இந்த படத்தை நீங்கள் ஏன் இயக்கவில்லை?எனக்கு அரசியல் பிடிக்கும். இந்தப் படத்தை நானே இயக்கியிருக்கலாம்தான். ஆனால், எனக்கு எமோஷனல் படங்கள் எடுப்பதில்தான் ஆர்வம். சந்தனத்தேவன், இறைவன் மிகப் பெரியவன், பருத்திவீரன் போன்ற படங்கள் எடுக்க விருப்பம். எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது, பயன்படுத்திக் கொண்டேன்.
சென்சார் போர்டு குறித்து உங்கள் கருத்து?சென்சார் போர்டில் புரிதல் இல்லை. இது பெரிய பாதிப்பை உண்டு பண்ணும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு சம்பவம் நடந்தால், சமூக வலைத்தளங்களில் எல்லோருடைய செல்போனில் அது இருக்கிறது. ஆனால், திரையரங்குகளில் வரக்கூடாது என்று நினைப்பது எப்படி என்று தெரியவில்லை.
சென்சார் போர்டு நிர்வாகிகள் முறையாக உருவாக்கப்படவில்லை என்பது என்னுடைய நீண்ட நாள் கருத்து. அதிகாரத்தில் உள்ள கட்சிகள், அவர்கள் சார்ந்து உள்ளவர்களைத்தான் அங்குள்ள அதிகாரிகளாக நியமிக்கிறார்கள். அது மிகச் சரியானதாக எனக்குப்படவில்லை. ஒரு தெளிவான அரசியல் பார்வையும், சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களை சென்சார் போர்டில் நியமித்தால் நன்றாக இருக்கும்.