சென்னை: திரைப்பட எடிட்டர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், உதயகுமார்; நடிகர்கள் இளவரசு, சிங்கம் புலி மற்றும் நடிகைகள் தேவயானி, இனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் அமீர் பேசுகையில், "ஒரு இயக்குநருக்குப் படத்தொகுப்பு மட்டுமல்ல, இசை, சண்டை, எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு படம் தேறுமா, தேறாதா என்று கண்டுபிடிப்பது எடிட்டர் தான். தன்னுடைய காதலியுடன் தனி அறையில் உட்கார்ந்து பேசும்போது எவ்வளவு சந்தோசம் கிடைக்குமோ? அவ்வளவு சந்தோசம், எடிட்டிங் ரூமில் இருக்கும்போது ஒரு இயக்குநருக்கு கிடைக்கும். எடிட்டர்கள் படத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்.
படம் தேறுமா தேறாதா என்பது முக்கியமல்ல. எடிட்டர்கள் அந்தப் படத்தை தேற்ற வேண்டும், அந்தப் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. சங்கங்களில் உள்ள பிரச்சனையே முதலில் இந்த நிர்வாகம் சரியில்லை என்று கூறுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, என்னை தாலிபான்களுடன் தொடர்புடையவன் என்று கிளப்பி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.