சென்னை: தமிழ்நாட்டில் மதம் மற்றும் இனத்தின் பெயரால் பிரச்சனைகளை ஏற்படுத்துவது பாஜகவின் வேலை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ யுஜிசி வரைவு அறிக்கை, மாநில அரசின் உரிமைகள் எல்லாம் பறிக்கக் கூடிய வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்களை திமுக கண்டிக்கிறது.
இதனை எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் என இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். மாநிலங்களில் உள்ள அதிகாரங்கள் மத்திய அரசு ஒன்றின் பின் ஒன்றாக பறிக்க நினைக்கிறது. இலங்கை அரசால் மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் முதலமைச்சர் பல முறை கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை பற்றி மோடி அரசு பேசவில்லை. வரி பகிர்வில் 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி மத்திய அரசிற்கு தமிழ்நாடு கொடுக்கிறது. அதில் 56 ஆயிரம் கோடி மட்டும் தான் மத்திய அரசு தருகிறது. ஆனால், உத்தர பிரதேசம், பீகார், குஜராத் மாநிலத்திற்கு அவர்கள் கேட்காமலே கொடுக்கிறார்கள். தமிழகத்திற்கு மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை?
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசு, பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து இருக்கிறது. இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல மும்முனைப் போராட்டத்தை போல திமுக நடத்தியது.
— DMK IT WING (@DMKITwing) February 9, 2025
- திமுக அமைப்பு செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள் #BJPCheatsTN pic.twitter.com/sLA8uO3U7R
தமிழச்சி என சொல்லும் நிதியமைச்சர் தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்? ஆசிரியருக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் தொகையை கொடுக்க மறுக்கிறார்கள். தமிழ்நாட்டை பழிவாங்க வேண்டும் என செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டின் பெருமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது மோடி அரசு.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடிக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆளுநர் மாளிகையின் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாமல் போனாலும் மாநில உரிமைகளை காப்பாத்துவதில் ஆதரவுடன் திமுக இருக்கும்.
தமிழ்நாட்டில் மதம் மற்றும் இனத்தின் பெயரால் பிரச்சனைகளை ஏற்படுத்துவது பாஜகவின் வேலை. ஈரோடு இடைத்தேர்தில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருக்கிறது, அவை எங்களுக்கு வேண்டப்பட்டது அல்ல. பிரதமர் மோடி கட்டிப்பாட்டில் உள்ளது.
இந்தியா கூட்டணி தலைவர்கள் பிரிந்து இருப்பதால்தான் டெல்லியில் பாஜக வெற்றியடைந்தது.டெல்லியில் காங்கிரஸ் கட்சியால் 16 இடங்களில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்துள்ளது. டெல்லி தேர்தல் முடிவுகள் மூலம் இண்டியா கூட்டணியினர் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது ஒற்றுமைகள் எதிர்க்கட்சிகளிடம் இருக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக போராடினால் தான் வெற்றி பெற முடியும்.