சென்னை: கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் விக்ரம், விநாயகன், ரீது வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’துருவ நட்சத்திரம்’. பல்வேறு பிரச்சனைகளால் பல ஆண்டுகளாக வெளியாகமலேயே கிடப்பில் இருக்கிறது. தற்போது அப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கௌதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார். ’துருவ நட்சத்திரம்’ எப்போது வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
கௌதம் மேனன் பேசியதில், ”ஏறக்குறைய எல்லா பிரச்சனைகளும் முடிந்து விட்டது. தற்போது மிகப்பெரிய உத்வேகம் கொடுத்தது ’மதகஜராஜா’ திரைப்படம் தான். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பலரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிடலாம் என கூறி வருகிறார்கள். சில பேர் இத்திரைப்படம் லாபமிட்டும் என நம்புகின்றனர். அதனால் ’துருவ நட்சத்திரம் ’திரைப்படத்தை வருகிற கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டே வெளியான துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது.