சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படத்தை சத்யஜோதி ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
இதில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் பெற்றது.
முன்னதாக, லண்டன் தேசிய திரைப்பட விருது விழாவில், 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல் மொழி திரைப்படப் பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃப்லிம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தது. இந்த நிலையில், லண்டன் தேசிய திரைப்பட விருது விழாவில் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல் மொழி திரைப்பட பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.