நீலகிரி: குன்னூர் ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்த குன்னூர் மலை ரயில் நிலையம் கடந்த 1908ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலை ரயில் பயணத்தின் போது இயற்கை அருவிகள், குகைகள், வளைந்து நெளிந்து செல்லும் ரயில் பாதை இயற்கை காட்சிகள், போன்றவற்றை ரசித்துச் செல்ல முடிகிறது.
இந்தப் பயணத்திற்காகவே அதிக வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நுழைவு வாயிலாக உள்ள இந்த ரயில் நிலையத்தை பழமை மாறாமல் பராமரித்து வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்கின்றனர்.
இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் நீலகிரி மாவட்ட நுழைவாயிலாக உள்ள குன்னூர் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் சார்பாக ரூ.15 கோடி செலவில் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ரயில் நிலையத்தில் உள்ள சுவர்களில் ஓவியங்கள் வரைய பெங்களூரில் இருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் வாழும் வரையாடு, மான், காட்டெருமை, யானை, நீலகிரி மலை ரயில் மற்றும் வன விலங்குகளை தத்ரூபமாக சுவர் ஓவியங்களில் உருவாக்கி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக வேலைபாடுகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நீலகிரி யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - MADRAS HIGH COURT
இந்நிலையில் குன்னூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்திற்கு சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் வந்து ஏதுவாக மாற்று வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை விழாவிற்குள் பணிகள் நிறைவடைந்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.